வெற்றிகரமாக கிரிக்கெட் போட்டியில் தோற்றிருந்ததால் நாம் அனைவரும் நன்கு களைத்துப்போயிருந்தோம், நண்பனின் வீட்டை அடைந்ததும் நண்பனிடம் தண்ணி கேட்க அவனும் எடுத்து வருவதாகக்கூறி வீட்டுக்குள்ளே போனவனைக்காணவில்லை. நா வறண்டு கிடந்தது, பசி வயிற்றுக்குள் கிக் பாக்சிங் ஆடியது.
அப்போதுதான் எமது கழுகுக்கண்களுக்கு அகப்பட்டது நண்பனின் வீட்டுக்குபக்கத்து வீட்டு வேலிக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த மாமரம். நண்பர் குழுவில் இரண்டு பேர் முதலில் களத்தில் இறங்கினர், "வேணாம்டா வம்பாயிரும்" என்று கனாக்காணும் காலங்கள் பச்சையின் டயலாக்கை நான் எடுத்துவிட்டும் அவர்கள் கேட்கவில்லை. சரி ஏதோ நடக்கப்போகிறது என்று உள்மனது சொன்னாலும் மாங்காய்க்கு முன் அனைத்தும் மறைந்து போனது, நானும் களத்தில் இறங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒவ்வொருவராக சத்தமின்றி மாங்காய் வேட்டையில் ஈடுபட்டாலும் நான்கு மாங்காய் தின்றதும் எங்களுக்கு என்னநடந்ததோ தெரியவில்லை,(பசியுடன் மாங்காயின் ருசி வேறு விடுவோமா என்ன) அனைவரும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு மாங்காய்களை சூறையாடத் தொடங்கினோம், மாங்காய் மட்டுமன்றி மரக்கொப்புக்களும் வந்துவிழ, நாம் மாங்காய்க்கு எறிந்த கல்லுகளும் குறிதவறி வீட்டுக்கூரையில் போய்விழ... உண்மையிலேயே வம்பாகிவிட்டது.
"டேய் நீங்க மனுசங்களாடா?" என்று ஒருகுரல், விடயம் சற்று சீரியசானதை உணர்ந்த நாம் நாசூக்காக அந்த இடத்தை விட்டு எஸ்கேப்பாக முயல(ஓடினால் அது நமக்கு அவமானமுல்ல) அந்தவீட்டிலிருந்து ஒரு முதியவர் வெளியே வந்து கத்த ஆரம்பித்தார், அன்று சனி என் தலையில் ஏறி ததிங்கிணத்தோம் ஆடியது என்றுதான் கூறவேண்டும். நான் போட்டிருந்த டீ-சேட்டில் என்பெயர் தெளிவாகப்பொறிக்கப்பட்டிருந்தது. அன்று முதல் நான் அந்த டீ-சேட்டைப் போடுவதில்லை. தப்பித்தவறி அந்த மாமர வீட்டுப்பக்கம் போகவேண்டிவந்தால் என்ன செய்வது.
பின்குறிப்பு- பறித்த மாங்காய்க்கு பக்கத்துக்கடையில் உப்பும் கடனுக்கு வாங்கி வயிற்றை நிரப்பிவிட்டு வீட்டுக்கு சென்றோம். Tweet
மாங்காய்க்குக் கல்லெறிந்த வீரரே, எனக்கு டீரெயில்ஸ் வேணும்.
1. மாங்காயின் வகை என்ன?
2. மொத்தம் எத்தனை பேர் திருடினீர்கள்?
3. டேய் நீங்க மனுசங்களாடா? என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் என்ன?
4. சனி தலையில் ததிங்கினத்தோம் ஆடும்வரை நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
5. கிரிக்கெட்டில் வெற்றிகரமாக தோற்பது எவ்வாறு?
இந்தக் கேள்விகளுக்கு பதில்கள் உடனடியாகவே எனக்குத் தெரிந்தாகவேண்டும்.