அச்சம் அறுத்தெறிந்து
மிச்சம் அழித்தொழித்து
துச்சம் என விரைந்து
தூற முயலும் ஒரு மேகம்
என்னதான் முயன்றாலும்
முடிவில் மிஞ்சும் சிறு எச்சம்
அச்சத்தை மிச்சம் வைத்து
துணிவை துடைத்தெடுத்துச் செல்கிறது!
வீழ்ச்சியின் சூழ்ச்சி தாண்டி
மீழ்ச்சிக்குள் ஏதோவொரு ஈர்ப்பு விசை
இழுத்து விடுமென்ற நம்பிக்கையில்
நகர்கிறது வாழ்க்கை!
-Bavananthan (2016/10/17)
விருட்சத்தின் உச்சத்தை
தொட்டுவிட்டு
ஓடிவந்து வேர் நுனியை
முத்தமிட்டு
ஒட்சிசன் வாயுக்களோடு
கலந்து பறந்து
புவியீர்ப்பை எதிர்க்கும் சிறகுகளின்
சூத்திரம் அறிந்து
வானவில்லின் அழகியல்
அறிந்து
மழைத்துளிக்குள் சிலநாள்
வசித்து
பெண் மண் இயற்கை
மேடு பள்ளம்
காதல் காமம் அன்பு
புரட்சி தாய்மை
அனைத்தையும்
திகட்டத் திகட்ட ரசிக்கும்
கவிஞர்கள் படைக்கும்
கவிதைகள் தினம்!
-Bavananthan (22/03/2017)
வெறுமையின் வறுமையினை
வேரறுத்து வீசிவிட்டு
தனிமையின் தலையணைக்குள்
தலை புதைக்கும் நேரம்
பொறுமையின் உச்சங்கள்
விரக்தியின் எச்சங்கள்
அணைந்த சில சொச்சங்கள்
ஆங்காங்கே மிச்சங்கள்
எதைக் கொண்டு கட்டியும்
ஆறாத காயங்கள்
எனைக் கொண்டு முட்டியும்
சேராத தாயங்கள்
காரணம் தேடியோடி
தவிப்புடன் தோகையாடி
மயில்களும் மேகம் தேடி
மழையதன் மோகம் நாடி
மண் தொட்டு முத்தமிட்டு
முளை தேடி எச்சமிட்டு
தொலைகின்ற எனைத்தேடி
தொடர்கிறது பயணங்கள்!
இனி!
-Bavananthan (20.03.2016)
தாகம் தான் எடுத்ததோ!
மழை நாடி மலர்ந்ததோ!
இருளுக்குப் பயந்ததோ!
ஒளிதேடி மலர்ந்ததோ!
எவர் கூறி இணைந்ததோ
யார் கூறி பிரிந்ததோ!
உண்மைகள் தெரியாமல்
உலகத்தை உணராமல்
விரித்த வலையினிலே
விரும்பியே விழுந்ததோ!
தேன் திருடன் தன் உடலைக் கண்டதுண்டமாய் வெட்டி வீழ்த்தி
தேனினைக் கவர்ந்து செல்ல
ஏமாந்து போய்ப் பாவம்
கதறித்தான் அழுததோ!
கவலையில் கிடந்ததோ!
தேன் வேட்டைக்காரன் தன்
கால் பட்டு ஒட்டியதோர்
தன் சக ஏமாளியின்
மகரந்தத் துகள் கொண்டு
அதிகமாய் தேன் கொண்டு
மறுபடி மலருமோ! - தேன்
திகட்டிட கொடுக்குமோ!
தேன் திருடனைப் பிடிக்குமோ!
அல்லது...
தான் மறுபடி இறக்குமோ!
-Bavananthan (27/01/2018)
விட்டுத் தள்ளு
புதியதாய் மலர்வதாய்
எண்ணிக் கொள்ளு
நிலைத்ததேது
தளம்பல்கள் தழும்பல்ல
முட்டித் தள்ளு
கனம் கொண்டு அமுக்கும்
கவலைகள் சிதைக்கும்
கதை வந்து புதைக்கும்
ஒட்டிக் கொள்ளும்
இடி வீழ்ந்து மனமெல்லாம்
நொருக்கித் தள்ளும்
விடச் சொல்லுவார்
சதியென்று சொல்லியும்
தொடச் சொல்லுவார்
கனவென்னுவாய் - அது
கனவாகிப் போகாதா
என எண்ணுவாய்
நம்பி இல்லை
வாழ்ந்திடக் கிடைத்ததோ
சிறிய எல்லை
காலம் வேண்டும்
கால் தொட்ட அலை காய
காற்று வேண்டும்
ஆட்டி வைக்கும்
சரி பிழை வழி தடை
காட்டி வைக்கும்
ஆழ்ந்து நீ சிந்தித்து
ஆளுமை கொள்
மூடரின் முன் - நீ
தொக்கி நிற்பதன்
காரணம் கேள்
ஆயுள் வரை
தண்டனை அளித்திட
தைரியம் கொள்
நன்றியைச் சொல் - உனை
தடக்கிய தளம்பலை
மன்னித்து உய்
உருக்கி ஊற்று - உன்
இலக்கினை அடைந்திட
பாதை மாற்று
அந்த நாளுக்காக
காத்துக்கொண்டிருந்தோம்
எழுதப்பட்ட வெள்ளை வரலாறு
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழங்கப்படும் ஒரே வாய்ப்பு
வரையப்பட்ட அடிமை சாசனத்தில்
விடுதலையை சுவாசிக்கக் கிடைத்த
ஒரேயொரு சந்தர்ப்பம்
வயல் வெளிகள் - அதன்
இடைவெளிகளில் ஊடுருவும்
சூரியக் கதிர்கள்
முட்டையிடக் காத்திருக்கும் குயில்
அந்நிய ஊடுருவலை அறிவிக்க
விடாது கானம் இசைக்கும் அணில்கள்
தென்னங்கீற்றோடு கீற்றாக
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு
வித்தை காட்டும் கிளிகள்
சிலந்தியின் கட்டுமானம்
தும்பிகளின் சாகசம்
தேன்சொட்டின் இறகசையும் ஒலி
அடைக்கப்பட்ட மூளைக்கு
சிறகடித்து பிரபஞ்சத்தை
பற்றக் கிடைத்த ஒற்றை வாய்ப்பு
உயிர்த்து நீரை விட்டு இடறி
வெளியேறுவதைக் காணக் கிடைத்த
ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை அது
அத்தனை சுதந்திர நீரையும்
திகட்டத் திகட்டப் பருக வேண்டுமென நினைத்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தால்
காலம் கடக்க வழி செய்வோம்
அதுவரை ஒவ்வொரு நொடிகளையும்
வாழ்ந்து வாழ்ந்து இரசித்திருப்போம்.
ஐயையோ ஐயையோ என்று
ஓடிவந்தார் பெருமான் அங்கிள்
என்னப்பா என்ன என்று
கேட்டு முடிப்பதற்குள்...
ஆயிரம் மத்தளங்கள்
அடம்பிடித்து மிரண்டாற்போல்
அத்தனை பொருட்களையும்
உதைந்தே நொருக்கி விட்டார்
மெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த
டியூப்லைட் இயக்கியையும்
என்னதான் செய்தாரோ
எரிந்து எரிந்து அணைகிறது
ஏனிந்த அவசரம் அங்கிள்
என்னதான் பிரச்சனை என்றேன்
அடேயப்பா அதையேன் கேட்டாய்
என்று எரிந்து கொண்டார்
சொல்லி முடிப்பதற்குள் - உம்
சோலி முடிஞ்சிடுமோ?
விளங்கிற மாதிரிக் கொஞ்சம்
விவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன்
மைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு
அந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு
அந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்
அந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்
வேர்க்காத ஊருக்குள்ள
வாழுகின்ற நீரெல்லாம்
குளித்தால்தான் என்ன
குளிக்காட்டித்தான் என்ன என்றேன்!
அடேய் சின்னப் பொடியா
உனக்கு விளங்கியென்ன பயன்
என்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே!
சந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே!
திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்
இடிமுழங்கி முடியவில்லை
மழை கொஞ்சம் ஓய்ந்தாலும்
நீரோடி வடியவில்லை!
எந்த ஏரியாவில் குளித்துக்
கொண்டு இருக்கிறாரோ!
என்னென்ன பொருளெல்லாம் - அங்கே
உடைந்து நொருங்கியதோ!
மத்தளங்கள் இடி முழங்க
சிவபெருமான் குளிக்கிறாராம்
தாத்தா சொன்ன கதை
புனைவு என்று தெரிந்த பின்னும்
நினைவில் நிற்கும் கதை
தாழமுக்கம் இருக்கும் மட்டும்
வாழும் இந்தக் கதை!
-Bavananthan
சிரமத்தை தானமும் செய் - சில
கலோரிகள் பொசுங்கிட வை
பல நோய்களை வருமுன்னே கா
உன் உடலின் வியர்வை களை
சேற்றாடும் மூடரினம்
வம்புக்கு உனை அழைத்தால்
உன் ஆடை கறைபட முன்
அதை விட்டு விலகியே செல்
அறிவினை வளர்த்திடவே
ஆயிரம் வழியிருந்தும்
புத்தியை கூர்விக்கும்
சொல்லாயுதம் துணை இருந்தும்
மூளையை மூத்திரமாய்
எங்கோ பெய்தொழித்த மூடரிடம்
வேடிக்கை வசைகளும் கேள்
வெக்கமின்றி சிரித்தும் வை!
வசை கொட்டி வம்பிழுத்து - உன்
தன்மானந்தனை உசுப்பி
வீரனின் நிலை உயர - அது
அக்கோழை செய்யும் இழிவு நிலை!
அமைதியாய் இருப்பதுவும்
ஆத்திரம் மறைப்பதுவும்
கோழையின் குணங்களில்லை
அது வீரனின் விவேக நிலை!
அதனுடன் கறைபுரண்டால்
ஆடையில் கறை படிந்தால்
ஆனந்தமே அதற்கு மட்டும்
ஆகவே உன் நிலையறிந்து
வீரனாய் அமைதியை பேண்!
-Bavananthan
அடி உதை அறுவடை செய்
அனைவர்க்கும் அறிமுகம் செய்
மிருகத்தை விதைச்சலும் செய்
பயிற்சியில் பலரையும் கொய்!
முதலையின் வாய் தொட முன்
அதை கண்களால் கழுவியே வை
காரியம் முடியும் வரை - அதன்
கல் மனம் கரைந்திடச் செய்
தலைமைகள் தவறிழைத்தால்
தாடைகள் தகருமென்றால்
குருத்துகள் வதை புரிந்தால் - இரு
விரல்களே சிதைக்குமன்றோ!
ஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று
அழித்திட முளை விடுமே!
ஆழமாய் புதைத்து விட்டாய் - இனி
நீ விதைத்தை அறுவடை செய்!
-Bavananthan
நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...
புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே
அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே
விழி இரண்டில் விழுகிற பொழுது
மொழி மறந்து தவிக்குது மனசு
கண் இரண்டின் காந்தங்கள் கண்டு
கனவினிலே நான் மிதக்கின்றேன் சென்று
எனை சாய்த்து விடு
உனை ஊற்றி விடு
உன் வெட்கம் வேரறு!
எனை தூக்கிலிடு
இதழ் மோதி விடு
உன் முத்த வாளெடு!
நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...
வானின் நீளம்
நம் காதல் வாழும்
எந்தன் வாழ்வும்
நிறமாகும்
புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே
அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே!
-Bavananthan
Music & Vocal: Honey Niagara
Lyrics: Bavananthan
போராடு நண்பா!
புது விதிகளை மாற்றி போராடு
வலி தாங்கு தோழா!
வரும் தடைகள் தாக்கு வேரோடு
வலி தந்த வாழ்க்கை முடியட்டும்
விழி கொண்ட நீரும் வடியட்டும்
கதை கொண்டு மோது
கரை தேடு
கலங்காதே!
திசை தோறும் உன் பேர் ஒலிக்கட்டும்
வசை ஊறும் நாக்கள் அடங்கட்டும்
கால் கொண்டு ஆடு
விடை தேடு
விதி மாற்றவே!
(போராடு நண்பா!)
விண்ணோடு மோது
புயல் காற்றைப் போல நீயாடு
தரை மோதி வீழு
கண்ணீரை உந்தன் உரமாக்கு
விழி தூக்கம் கொன்று
வலி ஏக்கம் கொண்டு
வழிகின்ற வாழ்க்கை
உன் காலில் மோதி வீழ்கிறதே!
எதிர்க்கின்ற களைகள்
தடுக்கின்ற சதிகள்
எதிர் கொண்டு மோதி
உன் எரியும் விழியில் கருகியதே!
(வலி தந்த வாழ்க்கை..)
-Bavananthan
Music: Vidushan
Lyrics: Bavananthan
காட்டிலே தவம் கொண்டு
காவியில் உடை கொண்டு
ஏட்டிலே பொருள் கண்ட
ஏகாந்தத் துறவி சொன்னான்
பிரிவென்ன சேர்வென்ன
பிறப்பென்ன இறப்பென்ன
ஆதியென்ன அந்தமென்ன
நீயென்ன நானென்ன
கரைகின்ற நொடிகளிலே
பிரிவெல்லாம் ஆசை
விரைகின்ற மரணத்திலே
உறவெல்லாம் மாயை
கண்ணே தெரியாமல்
காதுக் கருவி மாட்டாமல்
கோலூன்றாக் கொடை பெற்ற
ஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான்
ஆறேழு தலைமுறை
பாத்தவன்டா நான்
ஊரையே உருவாக்கி
விட்டவன்டா நான்
ஊரெல்லாம் உறவெனக்கு
பாரெல்லாம் மகனிருக்கு
வெறிச்சோடிய வீட்டினிலே
தனிமைதான் துணையெனக்கு
வெதும்பிய கண்ணீரை
தூசென்று துடைத்துவிட்டு
கண்ணாடி முன் நின்று
என்னுறவு இதுவென்றான்
அலுத்துக் களைத்தாலும்
சலித்து வெறுத்தாலும்
தோள் கனக்கும் சுமையுடன்
ஓடிவந்த பெற்றோரை
உறவென்றால் என்னவென்று
கேட்க எத்தனிக்க
நேரமே தெரியாமல்
நெடுநேரம் ஓடுகின்றோம்
காசு பணம் வரவரவே - எம்
கடன்களெல்லாம் அடைக்க வேண்டும்
பிள்ளைக்கு சேர்த்து வைக்க
நிலுவையில் போட்டு வைக்க
என்று ஒரு பட்டியலை
படபடென நீட்டி வைக்க
எங்கே உம் தாய் தந்தை
என்று கேட்டதுமே
ஏதோ ஒரு இல்லத்தில்
மகிழ்ச்சியாய் இருக்கிறாராம்
மாதாந்தம் சந்தா மட்டும்
கச்சிதமாய் போகிறதாம்
நன்றி சொல்லி ஓடிவந்து வந்து
இளைப்பாறிய எத்தனிக்க
உறவுக்கு விடை தேடி
ஓயாமல் அலையிறியே
பேசாமல் பேஸ்புக்கை
திறந்து விட்டுப் போ என்றான்
நேரத்தை காசாக்கும்
மனிய இயந்திரத்தின்
மழலையே கடக்காத
தொழிநுட்பச் சிறுவண்டு
அப்பா அம்மாக்கு தெரியுமாடா
எண்டு கேட்டால்
ஆறு மாசமா அவர்களுடனேயே
அதிலதானே கதைக்கிறானாம்
அப்பா வர காலையாகும்
அம்மா வர மாலையாகும்
பிறந்த போது பாத்ததுக்கு
வடிவா இன்னும் பார்க்கலயாம்
வேலைக்கு செல்வியம்மா
தினமும் வருவாராம்
சாப்பாடு தண்ணியெல்லாம்
அவர்தான் தருவாராம்
அவர் மட்டுந்தான் தன்னோடு
அதிகம் பேசிப் பழகுவாராம்
உறவென்று இவனுக்கு
செல்வியம்மாவாவது இருக்கின்றா
அவவிண்ட மகனுக்கு அங்கே
என்ன நிலைமையோ!
-Bavananthan
நாம்
வாகனம் கடக்கும்
பாதையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறோம்
எம்மைக் கடக்கும் போதும்
அசையாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம்
பயந்தடித்து எழுந்து
படபடத்து துடித்து
குதித்தெழுந்து ஓடி
உயிர் தப்பிய நாய்
ஓரமாகச் சென்று
படுக்கிறது
"காற்றைக் கட்டுப்படுத்தக்
கற்றுக் கொண்ட பின்
கலைந்த புகையும்
அணைந்த நெருப்பும்
ஒளிர்ந்து விடுமா?
என எதிர்பார்த்துத்
துடிக்கிறது மனது"
"எட்டி உதைந்து
கீழே விழுந்து
கழுத்து முறிந்து
சிறகு உடைந்து
முந்நூறு ரூபா குடிக்கு
மூவாயிரம் செலவழித்த பின்
உணர்ந்து கொண்டேன் என்றார்
குடிக்கக் கூடாதென்றா என்றேன்
இல்லை
தெரியாத வகை குடியை
தொடக்கூடாதென்று என்றார்"
-Bavananthan
யாருமிங்கே அடிமை இல்லை
சாதி மத பேதமில்லை
உயர்வு தாழ்வு ஏதுமில்லை
சமத்துவமே எங்கள் கொள்கை
புள்ளிகளை நிறைத்துக் கொள்ள
ஏட்டில் மட்டும் எழுதினீரோ?
பட்டங்களை பதக்கங்களாய்
வாரி வாரி இறைத்து விட்டு - தம்
கடுகளவு கட்டங்களுள்
வாழ்கிறது ஒரு கூட்டம்
உக்காந்த இடத்திலேயே
திண்டு திண்டு வண்டி வைக்க
அதிகாலை வண்டியோடு
ஓடிப்போய் நொண்டி நிக்க
எதுக்கு இந்த நாய்ப் பிழைப்பு
என்றுதான் எழுத வந்தேன்
வண்டி குறைக்க எந்த நாயும்
ஓடியதாய் தகவலில்லை
மன்னிக்க நாய்க்குலமே
ஏதோ ஒரு பழக்கத்தில்
வாய் தவறிச் சொல்லிவிட்டேன்!
ஐஞ்சு கிலோ அரிசி மூட்டை
என்ட அம்மா தூக்கி வந்தால்
அம்மாண கடுப்பாகும் என்று சொன்ன வாய் இன்று
யாரோ ஒரு அம்மாதானே
கசக்கிப் பிழிஞ்சிடலாம்
கொஞ்ச சம்பளத்தில்
கோடி வேலை வாங்கிடலாம்
தூரமென்ன பாரமென்ன
எல்லாம் கிடையாது
பேசாமல் தூக்கிறியா? - என
துப்பித் தொலைக்கிறது
படிச்சதெல்லாம் என்னமோ
பயங்கர பி.எஃச்.டியாம்
ஒரு காதல் தோல்வி உண்டா
வேலை தேடி அலைந்ததுண்டா
பட்டினியை சுவைத்ததுண்டா
குடிகாரன் பக்கம் வர
கூட தூரம் போனதுண்டா
சகிப்புத்தன்மை மன அழுத்தம்
விரக்தி கவலை வேதனையை
புத்தகம் தாண்டி வேறெங்கும் வாழ்க்கையிலே கற்றதுண்டா
அனுபவ அறிவு என்றால்
அந்தப் புத்தகம் என்ன விலை
என்று கேட்பவனை
ஏசி என்ன செய்ய?
அவன் படிச்சதெல்லாம்
பயங்கரப் பி.ஃஎச்.டியாம்
மனிதாபிமானம் எல்லாம்
அவனுக்கு என்ன கூந்தலுக்கு?
-Bavananthan
கேட்கலாமா வேண்டாமா?
கேட்டால் தருவாரா?
தருவதாய் சொன்னாரே?
சொன்னது போல் தருவாரா?
பக்கத்தில் வந்தால்
படக்கென்று கேட்டிடலாம்
இதோ வந்து விட்டார்
இப்போதே கேட்டிடலாம்
எல்லாம் இருக்கட்டும்
எப்படித்தான் கேக்கிறது?
கேட்டால் விளங்குமா?
எப்படி விளக்கிறது?
போனால் போகட்டும்
பேசாமல் விட்டுடலாம்
ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு
எதுக்கு இந்த திண்டாட்டம்
சேர்த்து வைத்திருந்தால்
பல நூறாய் சேர்ந்திருக்கும்
எத்தனை ஐந்து ரூபாய்
ஆவியாய் போயிருக்கும்!
செய்தேனா இல்லையா?
என்னவென்று தெரியவில்லை
செய்து விட்டாய் என்றார்
விளங்கவில்லை என்றேன்
அவருக்கது விளங்கவில்லை
என்னென்னவோ சொன்னார்
திட்டுறாரா கதைக்கிறாரா?
கோவமாக இருக்கிறாரா?
குரலே அப்படித்தானா?
பக்கத்திலே இன்னொரு
நாயும் குரைக்கிறது
யாருக்கு நான் என்ன செய்தேன்?
எதைத்தான் நான் மொழிபெயர்ப்பேன்!
திரும்பத் திரும்பக் கேட்டால்
கோட்சுக்கு போட்டிருவார்
கப்டன் விஜயகாந்த்
கடுப்பானாலும் பரவாயில்லை
மாத்தையாவையும் மன்னிப்பையும்
மாறி மாறிப் போட்டு வைப்பம்
போனால் போகுது
ஐநூறு ரூபாய் தானே
ஐநூறு ஐநூறாய் எத்தனை ஆயிரங்கள்
இப்பிடியே போனால் சில லட்சம் ஆகிடுமோ?
கணக்குப் போட்டுப் பார்த்தால்
கண்ணெல்லாம் இருட்டுதப்பா!
தண்டப்பணச் சீட்டில்
குற்றத்தின் பேரென்ன?
வாசிச்சுச் சொல்லி விட்டால்
கின்னஸில் பெயர் வருமோ?
வாயிருந்தும் ஊமைகளாய்
காதிருந்தும் செவிடுகளாய்
கண்ணிருந்தும் குருடுகளாய்
வட்டங்களுள் வாழ்ந்து கொண்டு
பேஸ்புக், ருவிட்டருக்குள்
வாள் வாளென்று கத்திவிட்டு
வாள் எடுத்து வீசியதாய் - அதை
வீரமென எண்ணி விட்டு
தேடிக் கொண்டிருக்கிறோம்
தேசிய ஒருமைப்பாட்டை!
கிடைத்தால் சொல்லுங்கள்
இல்லையேல் நில்லுங்கள்
இன்னுமொரு சமூக வலைக்குள்
தலை புதைப்போம் வாருங்கள்!
-Bavananthan

















