ஆர்முடுகலுடன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த புகையிரதம். திடீரென சடுதியான அமர்முடுகலுடன் செல்ல ஆரம்பித்தது. ஏதாவது STATION வருகிறதா என்று தலையை வெளியே எட்டிப்பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ராட்சத உருவம் போல நட்சத்திர ஒளியில் மரங்கள் கறுப்பாய்த்தெரிந்தன. வண்டி நிறுத்தப்படுகிறது. எழுந்து பார்க்கிறேன். அடுத்தகணம் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, என்ன கொடுமை நானிருந்த பெட்டியில் யாரையும் காணவில்லை, அடக்கடவுளே என்ன நடக்கிறது இங்கே? ஒன்றுமே புரியவில்லை கீழே இறங்கிப்பார்க்கலாம். பயமாகத்தான் இருக்கிறது. ஆம் இறங்கிப்பார்ப்பதுதான் சரி. இப்போது இறங்கி விட்டேன். வலதுகை ரயிலின் இறங்குமிடத்திலிருக்கும் கம்பியிலிருந்து விடுபட்டதும் ஏதோ ஒரு வெறுமையான உணர்வு பக்கத்தில் பயத்தைத்தவிர துணைக்கு யாருமின்றி தனியேநிற்பதுபோல, படக்கெனத்திரும்புகிறேன் ரயிலைக்காணவில்லை.
என்னகொடுமை இது திடீரென ஒரு சத்தம் "நகிர்தனா நகிர்தனா", அட எனது தொலைபேசிக்கு பேஸ்புக்கிலிருந்து பிரைவேட் மசேச் அனுப்பிருக்கிறார்கள். கும்மிருட்டு, கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமில்லை. அந்த இடத்திலிருந்து விரைவாக ஓடிப்போகவேண்டும் போல இருக்கிறது, ஆனால் மெதுவாக நடக்கும் போது கேட்கும் எனது காலடித்தடமே எனக்கு பயத்தை விளைவிக்கிறது. எத்தனையோ படங்களில் பார்த்த காட்சிகள், கேட்ட சத்தங்கள் போல இருக்கிறது. நீ தைரியசாலிடா பவன் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் போது அந்தப்பயத்திலும் சிரித்துக்கொள்கிறேன் மனதுக்குள். தூரத்தில் ஒரு ஒளி இருட்டுக்குள் கிடக்கும் கைத்தொலைபேசி போல தென்படுகிறது. அதைப்பார்த்து மனதுக்குள் ஒரு தைரியம் வந்தது போல ஒரு உணர்வு பயமும்தான். ஆம் நெருங்க நெருங்க வெளிச்சம் அதிகரிப்பது போல ஒரு உணர்வு. பக்கத்தில் வந்துவிட்டேன், நீலநிறகல் போல இருக்கிறது. ஆமாம் கல்லேதான் ஆனால் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. எப்படி?
முன்பொருமுறை எங்கோ படித்திருக்கிறேன், ராஜநாகங்கள் இப்படி விஷத்தைத்திரட்டி கல்லைக்கக்குமாம். அது நீலநிறத்தில் ஒளிருமாம் என்றெல்லாம். அப்போது அது கதைதான் உண்மையல்ல என்று நினைத்திருந்தேன். அப்போது அது உண்மையா? இங்கே பாம்புகள் இருக்குமோ? கும்மிருட்டு தற்போது எனக்கு நண்பனாகியிருந்தது. நான் வந்த ரயிலைக்காணவில்லை, ரயிலிருந்த ஆட்களைக்காவில்லை. என்ன நடந்திருக்கும் அமானுஸ்யம் என்ற ஒன்று இல்லை என்ற எனது எண்ணத்தில் மண்வாரி இறைக்கப்பட்டுவிடுமோ?
ஓங்கி வளர்ந்திருந்த பற்றைப்புற்களில் உரசிச்செல்லும் மெல்லிய காற்று இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல இருந்தது. திரும்பலாமா? பயமாக இருந்தது, மீண்டும் அக்குரல் இப்போது சற்று அழுத்தமான "தம்பி..."..
இப்போது திரும்பலாம் என்று நினைத்தபோது தோளில் யாரோ கைவைத்தார்கள். அதிரினலின் அதிவேகமாகச்சுரந்து கைகாலெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு மூளையிலிருந்து வாய்க்கு கத்து என்று கட்டளை கணப்பொழுதில் போய்ச்சேர....
ஆஆஆஆஆஆ......................கத்திவிட்டேன். எதிரில் நின்றிருந்த டிக்கெட் செக்கர் பயந்து வெலவெலத்துப்போய் நின்றுகொண்டிருந்தார். அடச்சா கனவா என்றபடி டிக்கெட்டைக்கொடுத்துவிட்டு கத்தும்போது தவறிவிழுந்த சுஜாதாவின் கொலையுதிர்காலத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். Tweet
தூங்கப் போகையில இதெல்லாம் படிச்சா இப்புடித்தான்:)