அன்றைய தினம் நான் படித்த கவிதையை பகிரலாமென இருக்கிறேன்.
கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் ஆரம்பத்தையும், அறிமுகத்தையும் தொடர்ந்து எனது கவிதை அரங்கேறியது.
லோஷன் அண்ணாவின் ஆரம்பக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
வல்லமை தாராயோ!
(வல்லமை தாராயோ ஒலிவடிவம்)
தாழ் திறந்து தாளெத்து
தோள் சுமந்த பாழ் கழைந்து
கவியெனும் வாள் எடுத்து
வீழ்த்த வழி கொடுத்த
புற்றளை நாயகன் விநாயகனுக்கு
என் சிரந்தாள் வணக்கம்
மிடுக்கு மீசைக்கு
பயங்கலந்த சிறு வணக்கம்
துடுக்கு நடைக்கு
துவளாத பெரு வணக்கம்
தலை காக்கும் பாகைக்கு
தலைதாழ் குரு வணக்கம்
கறுப்பு ஆடைக்கு
கரங்குவிந்த தமிழ் வணக்கம்
பாத்தலைவன் பாரதிக்கு
பண்புடன் ஓர் பா வணக்கம்
முத்தமிழ் மன்னனே - என்
மூத்த அண்ணனே
கவிதையின் கண்ணனே
வெற்றியின் விண்ணனே
விக்கலுக்கும் உனக்கும் நெருங்கிய தொடர்புண்டு
விக்கல் நிற்பதில்லை தண்ணீர் குடிக்கும்வரை
உன் முயற்சி தளர்வதில்லை வெற்றி கிடைக்கும்வரை
முயற்சியில் தளரா விக்கிரமாதித்தா
தளரா மனதுடன் உனக்கும் தமிழ் வணக்கம்
மேடையில் வீற்றிருக்கும் முதுபெரும் கவிகளுக்கும்
இளவலின் தனி வணக்கம்.
கவிமழையில் நனைய வந்து சபையில் இங்கு
உள்ளவர்க்கும் பொது வணக்கம்
என் மனமெங்கும் நிறைந்த
கனங்களைக் கழைய
மடல் ஒன்று வரைய
மை தீட்டிக் கொண்டேன்
எப்படித் தொடங்க?
அன்பே இல்லா மரத்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"அன்புள்ள பாரதி"
பாசமே இல்லா பயந்த நெஞ்சுடன்
எப்படிச் சொல்வேன்
"பாசமிகு பாரதி"
பண்பே இல்லா பாழ்பட்ட மனதுடன்
எப்படிச் சொல்வேன்
"பண்புள்ள பாரதி"
உணர்ச்சியே இல்லா உறைந்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"பாரதி பாரதி
மழையில் நனைந்த தீப்பெட்டி போல
சுடர்விட மறந்து ஈரமாய்க் கிடக்கும்
மனதை கந்தக பூமியில் வைத்து
உலர்த்தி உலர்த்தி உயிர் பெறவைத்து
சுடர் பெறவேண்டி தொடர்கிறேன் சும்மா
பிறக்கும் வரைக்கும்
மகிழ்வாய் இருக்கும்
பிறந்த பின்னே மகி்ழ்வே போகும்
வளரும் வரைக்கும்
வரையரை இருக்கும்
வளர்ந்த பின்னே வாழ்வே போகும்
இறக்கும் வரைக்கும்
ஆசைகளிருக்கும்
இறந்த பின்னே மக்கிக்போகும்
இப்பெரு உடலில்
எங்கோ எதிலோ
ஒட்டி வாழும் சிறுமனதோரம்
பெருகிய குமிறல்கள்
கொட்டி தீர்த்திட கொதிக்கும்
ஒரு மடல் வரைகிறேன்
சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ
நினைவுக் கொசுக்கள் கனவைக் கலைக்க
கண்திறந்து இருளைப் பருகும் வேளை
காண முனைந்து தோற்றுப்போன முந்தைய இரவின்
இறுதிக் கனவை ரசித்து ருசித்து உருக்கி எடுத்து
உணர்வை அளித்து உணர்ந்து முடிக்க
உருகிக் கேட்கிறேன் எனக்கு வல்லமை தாராயோ
புணர்ச்சி கறுமங்கள் கண்ணைக் கருக்க
உணர்ச்சி உறுமல்கள் மனதைத் துளைக்க
அவனும் அவளும், அவளும் அவனும்
காலையும் மாலையும், மாலையும் காலையும்
அடங்கி மடங்கி ஒடுங்கி கிடக்கும்
அமைதியான கடற்கரையோரம்
மதுவைக் கண்டால் குருடாய்ப் போகும்
காட்சிப்பெட்டித் திரைகள் போல
காட்சியைக் காணா கண்கள் கொள்ள
கதறிக்கேட்கிறேன் கடிதினில் எனக்கொரு
வல்லமை தாராயோ
கோபம் கொண்டு கோபம் கொண்டு
கொதித்துக் கொதித்து குமுறிய வரியை
காதல் கொண்டு காதல் கொண்டு
கனிந்து உருகிப் பருகிய வரியை
சோகம் கொண்டு சோகம் கொண்டு
கண்ணீர்த்துளியால் கோர்த்த வரியை
காமம் கொண்டு காமம் கொண்டு
கலவி முடித்து குலவிய வரியை
நட்புக் கொண்டு நட்புக் கொண்டு
நன்றிக் கடனாய் செதுக்கிய வரியை
ரசித்து ரசித்து ருசித்து ருசித்து
சிகப்புக் கோடால் அடிக்கோடிட்டு
அழுத்திப் படித்த அழகிய வரியை
கத்தி முனையில் நிறுத்தி்க் கேட்டும்
கரவொலி மறுத்த கரசேவையரின்
மனதைக் கவரும் மாயம் அறியும்
கலைந்து குறையாத கூட்டங்கட்டும்
மந்திரந்தெரிந்தெனக்கு வல்லமை தாராயோ
நானிலத்தவரின் நன்மையை நினைத்து
நாளும் பொழுதும் நன்மையே செய்து
பாரதியவனின் பாக்கள் புரிந்து
பாரதியவனின் பாங்கினில் வாழ்ந்து
நாவடக்கி நான் அடக்கி
நாங்கள் என்ற ஒற்றைச்சொல்லில்
சிலராய்ப் பலராய்ச் சேர்ந்தே இருந்து
நங்கூரப் பிடியாய் நகராமல் வாழ
வல்லமை தாராயோ
மற்றைய கவியரங்கக் கவிரங்கக்கவிகளையும் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்குங்கள்.
:)அட நல்லா இருக்கே :)