மனிதன் என்றால் மரணம் கட்டாயமானது என்பது எழுதப்பாடா விதி, அனைவரும் மனிதர்கள்தான் ஆனால் ஒவ்வொரு மனிதனையும் சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் வாழ்ந்த காலத்தில் அவனிடம் காணப்பட்ட தனித்துவமான குணங்கள்தான். அந்தவகையில் எனது பாட்டியின் தனித்துவமான குணங்கள் ஒரு சிறந்த மனிதனுக்கு உதாரணம்.
வரலாற்றுக் கதைகள் வாசிப்பதைவிடக் கேட்க மிகவும் நன்றாக இருக்கும், அந்த பாக்கியத்தை எனக்களித்த பாட்டி பிறந்தது 1934ம் ஆண்டு. இலங்கைக்கு சுதந்திரம் பிறந்தபோது நேரடியாக அதைப் பார்த்தவர் எனது பாட்டி, நான் சிறுவயதில் குடைந்து குடைந்து கேட்கும் எத்தனையோ கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி எத்தனையோ விடயங்களை எனக்கு கற்பித்த பாட்டிதான் எனது முதன்மையான ஆசான். முதன்முறையாக தொலைக்காட்சியில் கிறிக்கட் பார்த்துவிட்டு கிறிக்கட் விளையாட ஆசைப்பட்டேன், பட் வாங்கித்தந்து எனக்கு வீட்டில் விளையாட பந்து போட்ட முதலாவது விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எனது பாட்டி.
நான் சிலவேளைகளில் இரவு உணவை மாலையிலேயே உண்டுவிடுவேன், காரணம் அது பாட்டியின் கைவண்ணத்தில் அமைவதால், பாடசாலையிலிருந்து களைந்து விழுந்து வரும் எனக்கு "இரவு இந்த சாப்பாடு செய்து தாறன் வகுப்புக்கு போ" என்று அன்பாக கூறி அனுப்பி வைத்துவிட்டு மாலை வீட்டுக்கு வரும்போது சொன்ன சாப்பாட்டுடன் வரவேற்பார் எனது பாட்டி.
எந்த வரலாற்றுக் கதையைக் கேட்டாலும், மரத்தைக் காட்டினாலும், எந்த மிருகம், பூச்சி, பறவை, பாம்பு, பல்லியைக் காட்டினாலும் அதன் வகை அதன் குணம் பற்றி கூறக்கூடிய எனது பாட்டியின் அறிவு ஞாபகசக்தியைப் பார்த்து மலைத்துப்போயிருக்கிறேன்.
இவைதவிர எனது பிறந்தநாளுக்கு மட்டுமன்றி எனது பொம்மையின் பிறந்தநாளுக்கும் கேக் செய்து தந்தவர் எனது பாட்டி. நான் செய்யும் எத்தனையோ குழப்படிகளை மறைத்து அப்பா, அம்மாவின் பிரம்பிலிருந்து என்னைக் காப்பாற்றிய பாட்டி என்னைப் பொறுத்தவரை ஒரு சகலகலா பாட்டி.
நமக்கு நெருங்கியவர்களின் மரணம் நம்மை கட்டாயம் கதிகலங்க வைக்கும். அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம், அவர்களிடம் எமக்கிருந்த ஈர்ப்பு போன்றவை அதற்குக் காரணமாகும். உதாரணமாக நான் தொலைக்காட்சியில் கிறிக்கட் பார்க்கும் நேரத்தில் பாட்டி நாடகம் பார்ப்பார், எனக்கும் அவருக்கும் அன்று எங்கள் வீட்டில் ரிமோடுக்காக ஒரு பிடுங்குப்பாடு நடக்கும், அது சண்டையாக இருந்தாலும் வீட்டில் ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்தும். ஆனால் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் என்மனதில் விடையில்லாக் கேள்வியாக தரித்து நிற்கிறது.
இழப்புக்களை ஏற்கப்பயில்வோம், சோகங்களை மறக்கப் பயில்வோம், நினைவுகளை மனதில் எப்போதும் நினைக்கப் பயில்வோம். அண்மையில் இயற்கையெய்திய ஒரு வாழ்நாள் சாதனையாளர், எனது சகலகலா பாட்டிக்கு இந்நினைவுக்குறிப்பு சமர்ப்பணம்.
Tweet
பாட்டி(அம்மம்மா)வின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்