ச்சா.. முதல்நாளே இப்பிடியா, அவமானம் அனைவரின் முன்னிலையிலும், அதுசரி அட்மிசன் வழங்கும் தினத்தன்று ரிசல்ட் சீட்டை கொண்டுவராமல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது.
கல்லூரி, பிரதான வீதியிலிருந்து 4 கிலோமீட்டர் உள்ளே காட்டுப்பகுதியில் இருக்கிறது, வழியில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள், தண்ணீர் வழிந்தோடும் கான், இரண்டு ஏற்ற இறங்கங்களுடன் கூடிய குண்டுகுழியான பாதை, பாதையோரங்களில் ஓங்கி வளர்ந்த மரங்கள், பஸ் எப்பவாவது வரும் வராவிட்டால் நடந்துதான் செல்லவேண்டும்; நடக்கத் தொடங்கினேன். மழை தூற ஆரம்பித்திருந்தது. ஓடிப்போய் பஸ்தரிப்பிடத்துக்குள் நிற்பதற்குள் மழை எனது நீல சேர்ட்டில் புள்ளிகள் வைத்து விளையாடியிருந்தது.
முழங்கையை தரிப்பிடமதிலில் ஊன்றியபடி அந்த இடத்தை சற்று உற்று நோக்கிக்கொண்டிருந்தேன், எதிரில் ஒரு சிறு சாப்பாட்டுக்கடை, அதற்கு அருகில் போகும் மண்தரையுடன் கூடிய வீதி, “கள்ளுத்தவறணை” என்று பெயர் பொறித்து வீதியின் உள்ளே என அம்புக்குறியிடப்பட்டிருந்த விளம்பரப்பலகை, அதற்கு அருகில் குறுகிய எழுத்தில் என் பார்வைப் பரப்புக்குள் உட்படாமல் வீதியின் பெயர்ப்பலகை, தூரத்தில் மடக்கிய கறுப்புக் குடையுடன் மழையில் நனைந்து தள்ளாடியபடி இருவர்.
எனது கையிலிருந்த ஆவணங்கள் நிறைந்த பைலை மதில் சுவரில் வைத்து விட்டு கைகளால் தலையைத் துவட்டிவிட்டு, கண்களை இறுக்கி மூடி தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு இமைகளைத் திறக்க, பஸ் தரிப்பிடத்துக்குள் இருப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கட்டுக்குக்கீழே இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறி குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தன. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்த தரிப்பிடத்துக்குள் யாரோ கடதாசிப் பெட்டியை பாயாகப் பாவித்து நித்திரை கொண்டிருப்பார்கள் போலும் நன்றாக அழுத்தத்துக்கு உட்பட்டு அயன் பண்ணிய சட்டைபோல் கடதாசிப்பெட்டி ஒன்று தரிப்பிடத்துக்குள் கிடந்தது. அதை எடுத்து விரித்து பெட்டி போல ஆக்கி ஒரு பக்க வாயிலை மூடி மறுபக்க வாயிலை நாய்க்குட்டிகளுக்குக் காட்ட நன்றியுடன் உள்ளே ஏறி வாலாட்டின. எனக்குள் சிரித்துக் கொண்டு பெட்டியை மூடி மழைச்சாறல் படாமல் சீமெந்துக் கட்டுக்குக் கீழே வைத்துவிட்டு நிமிர அந்த இருவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.
“டேய் நாயே நான் அவ்வளவு சொல்லியும் அவள் எப்படியடா அப்பிடிச் சொல்லலாம்?, முதலாமவர்.
“அவள் செய்தது பிழையே இல்லையடா, நீ குடிகாரப் பயல்தானே பரதேசி, இரண்டாமவர்.
“டேய் உன்னைக் கொல்லாம விடமாட்டன்டா, என்றபடி முதலாமவன் மற்றவன் மேல் பாய அவன் போதையில் தடுமாறு என்மீது விழமுயல இலாவகமாக நழுவி என் பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர பஸ் என் முன்னாலேயே வந்து நிற்க, ஓடிப்போய் பஸ்சில் பின்பக்கக் கதவின் கம்பியை ஓடிப்பிடித்து ஏறிக்கொண்டேன்,
“சலாக்சுளிங்டொங்…” பின்னால் போத்தல் உடையும் சத்தம் பலமாக் கேட்டது.
****
மறுநாள் கல்லூரியின் முதல்நாள் பாடங்கள் முடிய வழக்கபோல பஸ்சைக் காணவில்லை, நடக்கத் தொடங்கினேன். மீண்டும் மழை, ஓட்டம், ஆனால் இம்முறை பஸ்த்தரிப்பிடவாயில் வரை மட்டுமே சென்ற கால்களுக்கு தடாலடியாக மூளை அனுப்பிய கட்டளையை நடைமுறைப்படுத்த முயன்று இரண்டு துள்ளல்களுடன் கட்டளை நிறைவேற்றிக் கால்கள் நிற்க. உள்ளே கண்ணாடிப்போத்தல் உடைக்கப்பட்ட துகள்கள், பிரவுண் கலரில் சாக்கைப் பிய்த்துப் போட்டாற்போல தும்புதும்பாக ஏதோ ஊகிக்க முடியாத ஒன்று, அத்துடன் வெள்ளை நிறக்கற்கள் மாதிரியும் ஏதோ, கிழித்தெறியப்பட்ட கடதாசிப் பெட்டி, என்ன இது என்று ஊகிப்பதற்குள் மறுபுறம் பற்றைக்குள் நனைந்தபடி தலையிலிருந்து இரத்தம், வடிந்து தசைகள் பிய்ந்து உள்ளே மண்டையோடு தெரிய செத்துக் கிடந்தன நாய்க்குட்டிகள். Tweet
அந்த நாய்க்குட்டி விவகாரம் உங்களை நன்றாகப் பாதித்திருப்பது தெரிகிறது பவன். அருமை :)