குளிர், மழை, வெள்ளம்
தற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம்.
பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மலரப்போகும் பொங்கல் தினத்திலாவது சூரியன் எட்டிப்பார்க்குமா?
சிறுத்தை
இன்று சிறுத்தை முதற்காட்சி பார்க்கப் போயிருந்தேன். குடுத்த காசுக்கு திருப்தியாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கார்த்தியின் மற்றுமொரு படம். கார்த்தி இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம். ஆரம்பத்தில் கலகலப்பாக நகைச்சுவையாக ஆரம்பிக்கும் படத்தில் முதற்பாதியின் இறுதியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பை அப்படியே இரண்டாம்பாதியின் முதல் அரைவாசி வரை கூட்டிச்சென்று கடைசிப் பாதியை கார்த்திக்கே உரிய குறும்பு, நகைச்சுவையுடன் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
சந்தானமும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். தமன்னா இடுப்பு படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தாலும் குஷி ஜோதிகாவுடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லை..:P
இவை தவிர படத்தில் திவ்யா என்ற பெயரில் வரும் பேபி ரக்சனா கலக்கியிருக்கிறார். கார்த்தி கோபமாக நடந்து கொள்ளும் ஒரு காட்சியில் குழந்தையின் மழலை மனதை உருகவைத்தது. மொத்தத்தில் சிறுத்தை சீரியஸ் பதிவில் கும்மியது போன்ற கலகலப்பான உணர்வைத்தந்தது.
படத்தின் கிளைமாக்ஸ் எம்மை அந்தக்கால படங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. மற்றும்படி சிறுத்தை - சிரித்தபடி பொழுதுபோக்க விரும்புபவர்களுக்கு மட்டும்
மனிதாபிமானம்
போன வாரம் ஒரு வெள்ளிக்கிழமை குடி குடியைக் கெடுக்கும் என்பதை முதன்முதலாகக் கண்கூடாகப் பார்த்தேன். அன்று நாங்கள் வகுப்பு முடிந்து பஸ் ஏறுவதற்காக வழக்கமாக பஸ் ஏறும் தரிப்பிடத்திற்கு வந்தோம். அங்கே இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வருவதைக் கண்டதும் பயந்து பயந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி ஒளிந்து கொள்ள முற்பட்டது.
அவதானித்துப் பார்த்ததில் ஒரு நாய்க்குட்டியின் கண்ணுக்கு சற்று மேலே காயம் வந்து குருதி வழிந்திருந்தது. பஸ்தரிப்பிடத்துக்குள் உடைந்த போத்தல்த்துண்டுகள் கிடந்தது. முதல்நாள் யாரோ பஸ் தரிப்பிடத்துக்குள் இருந்து மது அருந்திவிட்டு போதையில் கண்மண் தெரியாமல் நாய்க்குட்டிகளுக்கு அருகில் போத்தலை உடைத்திருக்கவேண்டும் அதன் காரணமாக தலையில் அடிபட்டிருக்கலாம் என்று ஊகிக்கமுடிந்தது. அருகில் உள்ள கடையில் கார்ட் போர்ட் பெட்டி வாங்கி நாய்க் குட்டிகளை உள்ளே பத்திரமாக வைத்து மழை சாரல் படாமல் பஸ் தரிப்பிடத்துக்குள் வைத்துவிட்டு வந்தோம்.
அடுத்த இரண்டு நாட்கள் எமக்கு வகுப்பு இல்லை திங்கட்கிழமை சென்று பார்த்த போது பெட்டி கிழித்து எறியப்பட்டிருந்தது. ஒரு நாய் தரிப்பிடத்துக்குள்ளும், மற்றது தரிப்பிடத்துக்கு வெளியில் மழையில் நனைந்தபடி இறந்துகிடந்தது..:(
Lolita
லோலிட்டா இந்தப்பாடலைக் கேட்டதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும் போன்ற உணர்வு ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனது ரிங்டோன்கூட அந்தப்பாட்டுத்தான் போட்டிருக்கிறேன், யாரும் அழைப்பெடுத்தாலும் சற்றுத்தாமதமாகத்தான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் (சிலர் நான் நித்திரை என்று நினைத்துப் பொறுமையிழந்து அழைப்பை அரைவாசியில் துண்டித்தும் விடுகிறார்கள்..:P) அந்த அளவுக்கு இப்பாடல் எனக்குப் பிடித்துவிட்டது. முதலாவது ஹரிஸ் ஜெயராஜின் இசை + கார்த்திக்கின் குரல் என்றால் அடுத்து தாமரையின் அழகான வரிகள்.
நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாயமதில்கூட பல வெண்ணிலா..
சீரற்ற காலநிலை - :(
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் பவன் :)
சிறுத்தை - பார்க்கணும்
மனிதாபிமானம் - இப்போதெல்லாம் பலருக்கு கிலோ என்ன விலைதான் :(
லோலிட்டா - என்னையும் கவர்ந்தது
படம் - அருமை