ஆரவாரங்கள் கூக்குரல்களுக்கு மத்தியிலும் ஹெஸ்மெட்டின் கட்டுப்பாட்டை மீறி காதுக்குப்பின்னால் வளைந்து எட்டிப்பார்க்கும் முடியில் பட்டு வீசிய மெல்லிய காற்றின் ஓசை சலனத்தையும் பயத்தையும் ஏற்படத்திக்கொண்டிருந்தது. ரொஜர் மீண்டும் ஒரு முறை ஸ்கோர் போர்ட்டைக் கவனித்துக் கொண்டான். பிக்பைட்டர்ஸ் கிளப் 9 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற வேண்டும். மீண்டும் லெக்ஸ்டம்ப் கேட்டான், கிறீசை விட்டு இரண்டு ஸ்டெப் முன்னால் நின்று கொண்டான்.
பந்துவீச்சாளர் ரன்அப்பைத் தொடங்கியிருந்தார். கமோன் ரொஜார் கமோன்.. என்ற ஆரவாரங்கள், அடிக்கமாட்டான் ஈசி ஈசிபாட்ஸ்மன் என்ற கீப்பரின் வார்த்தைகள் என எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை பந்து சோர்ட் பிச்சில் குத்தி அப்படியே இடது காதைப் பதம்பார்ப்பது போல வந்து கொண்டிருந்தது. உடனே பக்புட் போய் பந்தை ஹீக் சொட்டை அடிக்க முயல பந்து அப்படியே எட்ஜ் ஆகி கீப்பரின் தலைக்கு மேலாகச் சென்று ஹீரோஹொண்டா விளம்பரப்பலகையை முத்தமிட்டு நின்றது.
எட்ஜாகிப்போன பந்தை பார்த்துவிட்டுத் திரும்ப மழைபொழிய ஆரம்பிக்க அம்பயர் ஹவர் கவரை உள்ளே அழைத்து பிட்சை மூடச் சொல்லவும் சரியாக இருந்தது. 8 பந்துகளில் 8 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். அணி 9 விக்கட்டுகளை இழந்திருந்தது. Batஐ மழைநீர் படாமல் கக்கத்துக்குள் பதுக்கியபடி பிளேயர்ஸ் ரூமுக்கு ஓடினான் ரொஜர்.
அங்கு மாடியிலிருந்த washroomக்குப் போய் முகம் கழுவிக்கொண்டிருந்தான்,
“ரொஜர்..
குரல் கேட்டுத் திரும்பியவனுக்கு முன்னால் கறுப்பு கோர்ட், கூலிங் கிளாஸ், பாலிஸ் போடப்பட்ட shoes, ரெட் கலர் டை மற்றும் கையில் i phoneன் சகிதம் ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தான்.
“நீங்க??
“ஐம் ஜிம்ரோனி, இனோவேட்டிவ் ரொபாட்டிக்ஸ் கம்பனி ஓனர்.
“சொல்லுங்க என்ன விசயம்?
i phoneஐ தட்டி என்னமோ காட்டினான், ரொஜர் பேச முயற்சித்தபோதெல்லாம் பேசவிடவில்லை. கடைசியாகக்கேட்டான்.
“2லாக்ஸ் US டாலர்ஸ் வேர்த் டீலா? நோ டீலா?
“புன்னகையுடன் ஓகே என்று சொல்லிவிட்டு கீழே வர மழை விட்டிருந்தது.
8 பந்துகளுக்கு 8 ஓட்டம். முதலாவது பந்தை dot பண்ணி அடுத்த பந்தில் ஸ்ரைக்கை கீப் பண்ணவேண்டும். பிறகு ஆறு பந்துகளையும் எப்படியாவது மிஸ் பண்ணுவது போல் நடித்துவிட்டால் போதும். மனது பல கணிப்புகளை இட்டுக்கொண்டிருந்தது.
நினைத்ததைப்போலவே குட்லெந்தில் விழுந்து அவுட்சுவிங் ஆன பந்தை லீவ் பண்ணினான். கடைசிப் பந்துக்கு சிங்கிள் எடுத்தும்விட்டான். இப்போது 6 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று மாறியிருந்தது.
சமீர் பந்து வீச தயாராகிக்கொண்டிருந்தான், இடதுகை வேகப்பந்து வீச்சாளன், ரிச்சர்ட்ஸ் கிளப்பின் பிரதான பந்துவீச்சாளன். முதலாவது பந்து ஓஃபில் Full லெந்தில் விழுந்தது சிங்கிள் கூட எடுக்காமல் தடுத்தாடினான் ரொஜர்.
இப்போது ஸ்கோர்போர்ட் 5 பந்துகளுக்கு7 ஓட்டம் என்று காட்டிக்கொண்டிருந்தது. இப்போது இரண்டு ஸ்லிப் பீல்டர்ஸ் போடப்பட்டனர், பைஃன் லெக் சேக்கிளுக்குள் வரவழைக்கப்பட்டது. குட்லெந்தில் விழுந்த பந்தை தடுத்தாட முயன்ற ரொஜருக்கு போக்குக்காட்டி பந்து இன்சையிட் எட்ஜில் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.
4 பந்துகளுக்கு 3 ஓட்டம் பெறவேண்டும், மைதானம் ஆரவாரத்தில் முழ்கியிருந்தது. போட்டியில் பிக்பைட்டர்ஸ் ரசிகர்கள் வெற்றியை உறுதி செய்து கரகோசத்தில் மூழ்கியிருந்தனர். அடுத்த பந்தை dotball ஆக்கிவிட்டான் ரொஜர். இப்போது ரிச்சர்ட்ஸ் கிளப்பின் ஆரவாரம் சற்று அதிகரித்துக்கொண்டிருந்தது.
கடைசிப் 3 பந்துகளுக்கு 3 ஓட்டம் எடுத்தால் வெற்றி, அனைத்து பீல்டர்சும் சேக்கிளுக்குள் காணப்பட்டனர். கீப்பர் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு விக்கட்டுக்கு அருகில் வந்து நின்று கொண்டிருந்தார். சமீர் களத்தடுப்பை சரி செய்ய சற்று நேரம் எடுத்துக்கொண்டான், அனைவரின் முகத்திலும் ஒரு இனம்புரியா கலவரம் தொற்றிக்கொண்டிருந்தது. ரொஜரின் மனது இந்தப்பந்தை மூவ் பண்ணி அடிப்பது ச்சா அடிப்பது போல நடிப்பது என்று தீர்மானித்துக்கொண்டிருந்தது. சமீர் ரன்அப்பை ஆரம்பிக்க இரண்டு ஸ்டெப் முன்னால் வைத்து கிறீசை விட்டு வெளியே வந்தான், சமீரின் கையிலிருந்து பந்து வெளியேறிய மறுகணம் இன்னும் இரண்டு ஸ்டெப் முன்னால் பாய்ந்தவனைத் தாண்டிய பந்தை அடிப்பது போல் சைகை காட்ட பந்து பவுன்சாகி கீப்பரின் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது. அம்பயர் bye+4 என்று சைகைகாட்டிக்கொண்டிருந்தார். ஆதரவாளர்களின் கூச்சலுக்கு மத்தியில் சக அணியினரின் தழுவலில் சிக்கிய ரொஜரின் முகம் போலிப்புன்னகையை உதிர்ந்துகொண்டிருந்தது.
அம்பயரிடமிருந்து தொப்பியை வாங்கிய சமீர் கீப்பரைப்பார்த்து அர்த்தத்துடன் தலையை ஆட்டி புன்னகைத்தான்.