யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் திட்டியவர்கள் வயது போனவனே என்று அழைப்பதற்குப்பதில் அவ்வாறு அழைத்திருக்கிறார்கள். என்னடா இவன் கதைக்கிறான் என்று விளங்கவில்லையா? அதாவது நான் கூறவந்த விடயம் என்னவென்றால் நான் இப்போதெல்லாம் விலங்குகளின் பெயரைச்சொல்லி என்னை யாராவது திட்டினால் அவர்களுக்கு நன்றி சொல்கின்றேன். என்னைப்பார்த்து அவர்கள் ரொம்ப நல்லவன் என்று சொல்லும்போது நானெப்படி பேசாமலிருப்பது. இந்த பதிவை எழுதத்தூண்டியது நான் அண்மையில் படித்த வைரமுத்துவின் கவிதைதான்.
மனிதனாக இருக்கும் நாங்கள் குரங்கு வந்தால் வெடி போடுகின்றோம், நாய் வந்தால் "அடிக்..." என்று கலைக்கின்றோம், மாட்டை"போ.. போ.." என விரட்டுகின்றோம். அட இதிலென்ன ஆச்சரியம் இதுதான் இன்று முதியவர்களின் நிலையும் பெற்றவள் நம் அம்மா, நாம் வளர்ந்ததும் அவள் சும்மா என்றுதானே இருக்கின்றது நம் இளைய நாகரிக சமுதாயம். அந்தக்கவிதையில் வைரமுத்து "மனிதா!! நீ விலங்கை வணங்கு குறிப்பாக குரங்கை கும்பிடு" என்று கூறியிருப்பார், அட நமது மூதாதையர்தானே குரங்கு.
இந்தப்படத்தைப்பாருங்கள் கடைசியில் கம்பீரமாக நடக்கும் நீங்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள் என்று. ஆனால் இப்போது உங்களுக்கும், உங்களுக்கும்(குரங்கு) கண்ணுக்குத்தெரிந்த வித்தியாசம் அந்த வால் மட்டும்தான்.
அந்தக்குரங்கு எவரிடமும் கையேந்தி நிற்பதில்லை, யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழ்வதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை, எவரையும் நீ அந்த மதம், நான் இந்த மதம் என்று கூறி கழித்து வைப்பதில்லை, ஏன் மக்களை ஏமாற்றி போலிச்சாமி, போலி பொருட்கள், கலப்படம் என்று எதுவும் செய்வதில்லை. ஏன் தனது சகாவைப்பார்த்து பொறாமைகூடப்பட்டதில்லை. அதற்கு பசித்தால் உண்ணத்தெரியும், நித்திரை செய்யும், மனிதரைப்போல் பணம் சேர்த்து வைத்துவிட்டு நித்திரை கொள்ளமுடியாமல் தவிக்காது. அதற்கு பதவி, பட்டம், பணம் என்றால் என்ன என்றே தெரியாது.
இன்று சுதந்திரம் சுதந்திரம் என்றும், நாங்கள் வல்லரசு என்றும் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் உண்டா? இந்த விலங்குகளுக்கு உண்டு, ஆனால் வானமே அவற்றுக்கு கூரை, மண் அல்லது புல் தரையே அவற்றின் நிலம், இலைகுழைகளே அவற்றின் உணவு.
அடுத்து ZOO என்ற பெயரில்அவற்றை அடைத்து வைத்திருக்கிறீர்கள், சுதந்திரம் சுதந்திரம் என்று வாய்கிழியப்பேசிவிட்டு அவற்றுக்கு மட்டும் ஏன் சுதந்திரம் இல்லை. ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வசிப்பது யாரின் இடம் தெரியுமா? அந்த விலங்கு மகான்களின் இடம்தான். அவர்களின் இடத்தை அழித்துத்தானே வீடு அமைத்தீர்கள்? அவற்றின் இடத்தில் புகுந்து கொண்டு நீங்கள் அவர்களையே துரத்துகிறீர்கள், அடிமைப்படுத்துகிறீர்கள்.அந்த விலங்குகள் உங்கள் பெயரில் வழக்குப்போட்டால் என்ன செய்வீர்கள்? (உங்களைவிட அவர்களுக்குத்தான் உரிமை அதிகம்) எனவே விலங்குகளை பற்றிய கீழ்த்தரமான எண்ணத்தைக்கைவிடுங்கள், உங்களுக்கு இருக்க இடம் கொடுத்த தெய்வங்கள் அவை
இனியாவது சிந்திதத்து செயற்படுங்கள் எருமை என்று யாரையும் திட்டும் முன் யோசியுங்கள் அவன் நான்தான் உன் மூதாதையன் உன் வீட்டைக்காலி பண்ணு என்று சொல்லிவிடப்போகிறான்.