கேட்கலாமா வேண்டாமா?
கேட்டால் தருவாரா?
தருவதாய் சொன்னாரே?
சொன்னது போல் தருவாரா?
பக்கத்தில் வந்தால்
படக்கென்று கேட்டிடலாம்
இதோ வந்து விட்டார்
இப்போதே கேட்டிடலாம்
எல்லாம் இருக்கட்டும்
எப்படித்தான் கேக்கிறது?
கேட்டால் விளங்குமா?
எப்படி விளக்கிறது?
போனால் போகட்டும்
பேசாமல் விட்டுடலாம்
ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு
எதுக்கு இந்த திண்டாட்டம்
சேர்த்து வைத்திருந்தால்
பல நூறாய் சேர்ந்திருக்கும்
எத்தனை ஐந்து ரூபாய்
ஆவியாய் போயிருக்கும்!
செய்தேனா இல்லையா?
என்னவென்று தெரியவில்லை
செய்து விட்டாய் என்றார்
விளங்கவில்லை என்றேன்
அவருக்கது விளங்கவில்லை
என்னென்னவோ சொன்னார்
திட்டுறாரா கதைக்கிறாரா?
கோவமாக இருக்கிறாரா?
குரலே அப்படித்தானா?
பக்கத்திலே இன்னொரு
நாயும் குரைக்கிறது
யாருக்கு நான் என்ன செய்தேன்?
எதைத்தான் நான் மொழிபெயர்ப்பேன்!
திரும்பத் திரும்பக் கேட்டால்
கோட்சுக்கு போட்டிருவார்
கப்டன் விஜயகாந்த்
கடுப்பானாலும் பரவாயில்லை
மாத்தையாவையும் மன்னிப்பையும்
மாறி மாறிப் போட்டு வைப்பம்
போனால் போகுது
ஐநூறு ரூபாய் தானே
ஐநூறு ஐநூறாய் எத்தனை ஆயிரங்கள்
இப்பிடியே போனால் சில லட்சம் ஆகிடுமோ?
கணக்குப் போட்டுப் பார்த்தால்
கண்ணெல்லாம் இருட்டுதப்பா!
தண்டப்பணச் சீட்டில்
குற்றத்தின் பேரென்ன?
வாசிச்சுச் சொல்லி விட்டால்
கின்னஸில் பெயர் வருமோ?
வாயிருந்தும் ஊமைகளாய்
காதிருந்தும் செவிடுகளாய்
கண்ணிருந்தும் குருடுகளாய்
வட்டங்களுள் வாழ்ந்து கொண்டு
பேஸ்புக், ருவிட்டருக்குள்
வாள் வாளென்று கத்திவிட்டு
வாள் எடுத்து வீசியதாய் - அதை
வீரமென எண்ணி விட்டு
தேடிக் கொண்டிருக்கிறோம்
தேசிய ஒருமைப்பாட்டை!
கிடைத்தால் சொல்லுங்கள்
இல்லையேல் நில்லுங்கள்
இன்னுமொரு சமூக வலைக்குள்
தலை புதைப்போம் வாருங்கள்!
-Bavananthan