மர்மங்கள் சூழ்ந்து விட்டால்
மடைத்தனங்கள் சேர்ந்து விட்டால்
கர்வத்தில் ஆழ்ந்து விட்டால்
கடைசிவரை மூழ்கி விட்டால்
சல்லடைகள் தோன்றி விட்டால்
சகதியிலே வீழ்ந்து விட்டால்
சொல்லடிகள் தாங்கி விட்டால்
சோகம் வந்து தங்கி விட்டால்
பிறவியினை துஞ்சி விட்டால் துறவியினை மிஞ்சி விட்டால்
தலைக்கனமும் கழன்று விட்டால்
தடுமாறி நின்று விட்டால்
எல்லைகளை நீக்கி விட்டால்
தொல்லைகளை நீங்கி விட்டால்
களை பெருகிக் கனத்தாலும்
துரோகங்களை எரித்து விட்டால்
ஆத்திரங்கள் அழித்து விட்டால்
காத்திரமாய் பழகி விட்டால்
முதுகுத்தோல் கிழிந்தாலும்
சிரித்துவிடப் பழகிவிட்டால்
தனிமையினை விரும்பி விட்டால்
சுயத்தை நம்பத் தொடங்கி விட்டால்
வட்டங்களை தூசு தட்டி
உடைத்தெறிந்து வந்து விட்டால்
அச்சங்களே இல்லாமல்
வாழ்ந்து விடப் பழகி விட்டால்
துச்சமென எதுவரினும்
துணிந்து மோதி வென்று விட்டால்
சிரித்தவன் முன் ஏறி வந்து
சிரம் உயற்றி நின்றி விட்டால்
சாதனையால் அவன் முகத்தில்
காறி உமிழ்ந்து விட்டால்
சரித்திரத்தில் உன் பெயரை
செதுக்கி நீ வென்றுவிட்டால்
மாஸ்லோவின் கூம்பகத்தில்
உச்சத்தை நீ தொட்டு விட்டால்
இன்னும் கொஞ்சம் கற்றுவிட
எண்ணம் கொண்டு எழுந்து விட்டால்
புதிதாக ஒன்றைத் தேடி
கற்றுவிட தொடங்கி விட்டால்
வாழ்க்கையில் மீண்டும் ஒரு
அத்தியாயம் தொடங்கி விட்டால்
அனுபவங்கள் அறைந்தாலும் அதை மறந்து தொலைத்து விட்டால்
மீண்டும் துரோகத்தில் இதயம் கிழிந்து விட்டால்
தோல்விகளில் கால் வழுக்கி கொடூரமாய் வீழ்ந்து விட்டால்
புதிய உலகத்துள் புரிந்து கொண்டு
நுழைந்து விட்டால்
மறுபடியும் இக்கவிதை
முதல் வரியில் தொடங்கி விட்டால்...!
-Bavananthan
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment